ABOUT MURASANCODE

முரசங்கோடு(Murasancode) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்தில், நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓர் சிற்றூர் ஆகும்.

மக்களின் வாழ்க்கை முறை
முரசங்கோடு ஊரில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரின் மக்கள் தொகை சுமார் 2000 ஆகும். இவ்வுர் மக்கள் தொகையின் ஆண் பெண் விகிதம் 52க்கு 48 என்று கூறலாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமே இங்கு முதன்மை தொழிலாக இருந்த்து. தற்போது மக்கள் பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலைப் பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கட்டிடப் பணிகளி்ல் ஈடுபட்டுள்ளனர். அரசு பணி செய்வோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் 65 விழுக்காட்டினர் கான்கிரிட் வீடுகளிலும் 30 விழுக்காட்டினர் ஓட்டு வீடுகளிலும் மற்றவர்கள் ஓலை குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆலயம்
இங்குள்ள மக்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்த்தவர்கள் ஆவர். ஊரின் நடுவே தூய கார்மல் அன்னை ஆலயம்[1] அமைந்துள்ளது. மாங்குழியின் கிளைப்பங்காக இருந்த முரசங்கோடு கிபி 1963 ஆம் ஆண்டு தனிப்பங்காக உருவானது. இது கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்கு ஆகும். பங்கு அருட்பணிப் பேரவை இதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகின்றது. இப்பங்கில் 11 அன்பியங்கள் செயல்பட்டுவருகின்றன. பாளையம், இலந்தவிளை, கண்ணோடு ஆகியவை இதன் கிளைப்பங்குகளாகும். கோட்டவிளை பகுதியில் மக்களின் வசதிக்காக சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கண்ணோடும், திங்கள் நகரில் உள்ள தச்சம்பரம்பும் முரசங்கோட்டிலிருந்து தனிகிளைப்பங்குகளாக வளர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 0730 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. பங்கு குடும்ப விழா, பாதுகாவலியான தூய கார்மல் அன்னையின் நாள்படி விழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தற்போது பணி. இராபர்ட் ஜாண் கென்னடி அவர்கள் பங்குப்பணியாளராகப் பணியாற்றி வருகிறார்கள்.

கல்வி

இந்த ஊர் 100 சதவிகிதம் எழுத்தறிவுப் பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்கள். ஊரின் நடுவே கோயில் வளாகத்தில் 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மேரி ஆரம்பக் பள்ளி செயல்ப்பட்டு வருகின்றது.

சமூகப்பணி

இவ் ஊரில் இயேசுவின் திரு இருதய சபை அருட்கன்னியர்களால் நடத்தப்படுகின்ற ஏழை மாணவர் இல்லம் செயல்பட்டு வருகின்றது. மேலும் அடித்தள முழுவளர்ச்சி சங்கம் என்ற அமைப்பின் மூலம் பங்கிலுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, குடிசை மாற்றும் திட்டம், மருத்துவ உதவிகள், ஆதரவற்ற முதியோர் உதவி போன்றவை எளிய முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

முரசு அறிவகம்
முரசு அறிவகம் ஊரின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இது 26 ஏப்ரல்,2010 அன்று பணி. ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமையில், குமரி ஆதவன் எழுச்சி உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மறைக்கல்வி மாணவர்கள் இதணை பயன்படுத்தி வருகிறார்கள். இவ் அறிவகத்தில் சுமார் 300 புத்தகங்கள் உள்ளன.

முரசு இதழ்
முரசு அறிவகத்துடன் இணைந்து முரசு இதழ் மக்களின் அறிவை வளர்க்கும் பணியில் பெரும் பங்கு ஆற்றிவருகின்றது. மக்களின் பங்கெடுப்புடன் வரும் இவ்விதழ் ஒரு பல்சுவை இதழாகும். இது மூன்று மாதாத்திற்கு ஒரு முறை வெளிவருகின்றது.

குளங்கள்
இந்த ஊர் நீர் வளமும் நிலவளமும் கொண்ட ஊர். இயற்கை வளங்கள் சூழ்ந்த இவ் ஊரைச் சுற்றி 9 குளங்கள் காணப்படுகின்றன. அவைகளின் விவரம்

* முருங்கைப் பொத்தைக் குளம்
* காக்கான்பொன் குளம்
* பள்ளங் குளம்
* சீம்பிளிக் குளம்
* அம்மாள் குளம்
* வாலாங் குளம்
* காட்டுக்குளம்
* கண்ணோட்டுக் குளம்
* காஞ்சிராங்குளம்

கார்மல் சமூக கூடம்

கார்மல் சமூக கூடம் கோயில் வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் இவ்வூரில் நடைபெறும் திருமணங்கள், மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இச்சமூக நலக் கூடத்திலேயே நடைபெறுகிறது.

சாலை வசதி
இரண்டு சாலைகள் இவ்வூர் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கின்றது. சாலைகள் விவரம்

* நெய்யூர்- காக்கான்பொன் குளம் இணைப்புச் சாலை
* நெய்யூர்-மேக்கோடுச் இனணப்புச் சாலை

மருத்துவ வசதி

பக்கத்திலுள்ள நெய்யூர் மருத்துவமனை இவ்வூர் மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. இம் மருத்துவமனை 1835 ம் ஆண்டு புரோட்டஸ்டாண்டு சபையினரால் தொடங்கப்பட்டது. தறப்போது இவ் மருத்துவமனையில் ஒரு கிளையாக இனடர்நேசனல் கேன்சர் சென்டர் என்ற புற்றுநோய்க்கு மருத்துவம் அளிக்கும் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

பக்கத்தில் உள்ள ஊர்கள்
* நெய்யூர்
* பாளையம்
* இலந்தவிளை
* மேக்கோடு
* திங்கள்நகர்
* இரணியல்
* பரம்பை
* கண்ணோடு
* கொக்கோடு
* ஆலங்கோடு
* ஆத்திவிளை
* பூச்சிக்காடு
* கோட்டவிளை

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP